Saturday, January 11, 2020

கரைந்த கவலைகள்



துயில் எழுந்ததிலிருந்து இனம் புரியா துக்கம்.
தூங்கினால்,துக்கம் போகுமென உறங்கினேன்,
துரும்பை போல் துருத்திக்கொண்டே இருந்தது.

பசித்திருந்தால் பரவாயில்லை என்றாலும் 
படுத்தியது மனது.

உண்டால் உற்சாகம் வருமென
பிரியாணி யையும் பிரித்தேன்
பட்டினியே பரவாயில்லை என்றது.

காற்று வாங்கினால் கவலை கலைந்து போகும் என
கடற்கரை நடந்தேன்
கவலை குட்டிகள் போட்டது

ரசித்தால் ரணம் ஆறும் என ரஜினியை பார்த்தேன்
கவலை ரயில் போல் நீண்டது 

சமைத்தால் சரியாகும் என நினைத்தேன் 
சமயம் பார்த்து மீண்டும் வந்தது.

சமைத்ததை சாப்பிட மனமில்லாமல் பிளாட்பார தாத்தாவுக்கு பகிர்ந்தேன்
பொக்கை சிரிப்பு கண்டு மனம்,பூக்க கண்டேன் .



Attachment.png

Monday, January 6, 2020

Sleeping beauty

 காலை கதிர்கள் உன் முகத்தில் பட்டு  சிதறி வானவில்லாய் உன்னை பார்த்து புன்னகைக்கும்!

ஜன்னல் பறவை கண்ணாடி வழியே உன்னைக்கண்டு அமைதி காக்கும்!

சாலை வாகனங்கள் நம் வீடு தாண்டும் வரை கப்பலாய் மிதக்கும்!

கடிகார அலாரம் 59 நிமிடம் முடிந்து சத்தமில்லாமல் அடுத்த மணிக்குள் கைகளை நுழைக்கும்!

இவ்வளவு ஏன்
நேரமாச்சு இன்னுமா தூக்கம் என எழுப்ப வந்த நானும்
உன்னில் மயக்கம் கொண்டேன்!
அந்த ஆயர்பாடியின் கண்ணனும் நீயோ!!!

Sunday, January 5, 2020

பயணங்கள் முடிவதில்லை

பயணங்கள் முடிவதில்லை

இந்த விடுமுறைக்கு வெளிநாடு  வேண்டாம்  என்று முடிவு செய்து இருந்தோம் . பிளானிங் செய்ய அதிக நேரம் இல்லாததே அதற்கு முக்கிய காரணம்.இது வரை செல்லாத இடம் எங்கேயாவது செல்லலாம் என்று யோசித்து கொண்டிருந்த பொழுது தான் , என்னுள் பல நாட்களாக உறங்கிக்கொண்டிருந்த அந்த ஆவல் உயிர்ப்பித்தது.அந்த பிரம்மாண்டத்தை காண வேண்டும் என்ற அந்த கனவு தான் அது. அந்த விசாலமான கனவுக்காக ட்ராவல் பிளான்ஐ கொஞ்சம் விசாலப்படுத்தினால் தவறில்லை என்று தோன்றியது.அன்புடையவரும் ஆர்வமாக ,ஆரம்பானது நேபாளத்திற்கான திட்டம்.
இந்தியற்களுக்கு விசா வேண்டாம் என்பது கூடுதல் வசதி.பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஏதோ ஒன்று போதும் உள்ளே செல்ல.எதேச்சையாக அன்றிரவே சென்னை - டெல்லி - காத்மாண்டு (அதே பாதையில் திரும்புவதற்கும்) விமான டிக்கெட்களும் பட்ஜெட் ரேட்ல் கிடைக்க பெற்றோம்.
விடியற்காலையில் விமான நிலையம் செல்ல வேண்டி
இருந்தாலும்,வாழ்க்கையின் மிகப்பெரிய கனவு நினைவாக போகிறது என்ற எண்ணம் உள்ளுக்குள் குதூகலிக்க தூக்கம் தூர சென்றது.சென்னையே இவ்வளவு குளிராக இருக்கிறதே! என்று இணையத்தின் உதவியுடன் அங்கே குளிர் நிலவரத்தை அறிந்து அதற்கு ஆயுத்தமாகவே சென்றோம்.
பிரயாண களைப்பு பெரியதாக இல்லாமல் கிளம்பிய அன்று பிற்பகலே காத்மாண்டு வந்து அடைந்தோம்.எங்களுக்கு என்று புக் செய்யப்பட்ட ஹோட்டல் ரூமில் இளைப்பாறிவிட்டு அடுத்த நாளுக்கு ஆயுத்தமானோம்.
அடுத்த நாள் பசுபதிநாதர் தரிசனம்.கூட்டம் கூடிருந்தாலும் ஆனந்த தரிசனம்.கார் நிற்குமிடத்தில் இருந்து நடக்கும் தூரம் தான்.கோவிலுக்கு பின்புறம் பாக்மாதி ஆறு ஓடுகின்றது.நம் காசியை போன்று இங்கேயும் இறுதி சடங்குகள் நடக்கின்றன.எல்லாரும் கடைசியில் இறைவனையே சேருவோம் என்பதிற்கிணங்க , இறைவன் இல்லத்திலேயே ஈம கிரியை.
பின் அங்கிருந்து நாங்கள் சென்ற இடம் போதிநாதர் ஸ்தூபி . அமைதியின் சொரூபமான புத்தரின் திருக்கோவில்.மிக களைப்பாகவும் , குளிராகவும் இருந்த போதிலும் மனதிற்கு இதமாக இருந்தது.கோவில் முடிந்து கடைத்தெருவில் ஷாப்பிங் மற்றும் டின்னர் முடித்து விட்டு ரூம் திரும்பினோம்.
இங்கே அனைவரும் ஹிந்தி பேசுகிறார்கள்.எல்லாம் இடங்களிலும் ரொட்டி மட்டும் புலாவ் வகைகள் கிடைக்கின்றன. வெஜ் ஹோட்டேல்கள் நிறையவே உண்டு. கரன்சியும் இந்திய ரூபாய் தந்தால் வாங்கி கொள்ளுகிறார்கள் . மீதி சில்லறை மட்டும் நேபால் கரன்ஸி இல் தருகிறார்கள். கடைக்காரர்கள் விலையை கூட நேபாள கரன்சியில் கூறிவிட்டு பின் IC (இந்தியன் currency ) யிலும் கன்வெர்ட் செய்து சொல்கிறார்கள்.
புதிதாக வந்த 2000 மட்டும் 500 ரூபாய் நோட்டுகள் அங்கே செல்லாது என்பது கூடுதல் தகவல். பல நேரங்களில் வெளிநாடு போன்ற உணர்வே இல்லாமல் ஏதோ வடஇந்தியாவில் இருப்பதை போன்ற உணர்வு தான் வருகின்றது.
மறுநாள் காலை நான் மிகவும் எதிர்பார்ப்போடு இருந்த
mountain flight .காலை 5 மணிக்கெல்லாம் எழுந்து தயாராக வேண்டும்.இந்த நடுங்கும் குளிரில் (3 degrees) எப்படி எழுந்து கிளம்புவது என்ற யோசனை ஒரு புறம் இருக்க , இமயத்தை காண போகிறோம் என்ற ஆவல் தூங்க விடாமல் துரத்தியது.

இமயம் எப்பொழுதுமே என்னை ஆச்சரிய படவைக்கும் ஒன்று.ஏன் என்ற காரணம் இது வரை தெரியவில்லை. அதன் ப்ரம்மாண்டமா? ரம்மியமா ? என் இஷ்ட தெய்வம் சிவனின் இருப்பிடம்
என்பதாலா ?பதில் இல்லை என்னிடம். ஆனால் எப்பொழுது நினைத்தாலும் இமயம் என்னை மூச்சடைக்க வைக்க தவறியதே இல்லை.
இதுவரை படத்தில் மட்டுமே கண்ட இமயம் நேரில் எப்படி இருக்கும் ? பாலை விட வெண்மையோ ? மழலையின் சிரிப்பை விட
புனிதமோ ?என் அன்னையின் வாசனை வருமோ ? யானை போல் ப்ரம்மாண்டமாயின் அமைதியாய் இருக்குமோ ? அப்பப்பா , எவ்வளவு கேள்விகள் என்னுள்ளே ? ஆவலை அடக்கி தூங்க முயற்சிக்கிறேன். மனதின் அலையோட்டம் ஒரு புறம், உடல் அசதி மறுபுறம் என்ற போதிலும் , உடல் வெல்ல , என்னையறியாமல் ஆழ்த்த உறக்கத்திற்கு சென்றேன்.
அலாரம் அடிக்கும் முன்பே ஆழ் மனது அடித்து எழுப்பியதன் பேரில் 5 மணிக்கு ஆயத்தமாகி ஏர்போர்ட் வந்தோம்.6 மணிக்கு கிளம்ப வேண்டிய 2 பிளைட்களில் எங்களுடையது 2 ஆவது.ஆவலுடன்
அமர்ந்திருந்த எங்களுக்கு முதல் அதிர்ச்சி முதல் பிளைட்டே கிளம்ப தாமதமாகும் என்பது தான்.மலையின் மீது இருக்கும் ஏர்போர்ட்களில் இருந்து கிறீன் சிக்னல் வராத காரணத்தினால் மேலும் தாமதமாகலாம்
எனப்பட்டது.விசாரித்ததில் முதல் நாள் 6 மணி பிளைட் 9 மணிக்கும்,அதற்கு முன் தினம் பிளைட் புறப்படவேயில்லை என்றும் அறிந்தோம்.கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் இருந்த எங்களுக்கு முதல் பிளைட் கிளம்ப ஆயத்தமானது என்ற செய்தி தித்தித்தது.இருந்தும் எங்கள் பிளைட் கிளம்பவேயில்லை.emergency landingகாக மலை மீது இருக்கும் ஏதாவது ஒரு ஏர்போர்ட் திறந்தால் மட்டுமே பிளைட் கிளம்பும் என்றனர்.(பனி அதிகமானால் அங்கே இருக்கும் ஏர்போர்ட்கள் திறக்கப்படுவது இல்லை).
பிரார்த்தனைகள் பலிக்கத்தான் செய்கின்றன. சட்டென ஒரு ஏர்போர்ட்டில் இருந்து சிக்னல் வர , டக்கென 30 பேர் இருக்கைகள்  கொண்ட அந்த அலுமினிய பறவை ,எங்களையும் சுமந்து கொண்டு ஹிமாலயத்தை நோக்கி பறக்க ஆரம்பித்தது.
அனைவரும் ஜன்னலோர இருக்கைகளில் மட்டும் அமர்த்தப்பட்டனர்.aisle இருக்கைகள் காலியாகவே இருந்தன. அந்த பறவை பறக்க துவங்கி 20 நிமிடங்களில் , இதோ எங்கள் கண் முன்னே,பனிப்போர்வை போர்த்தி கம்பீரமாய்,எங்களை ஆசிர்வதித்தது எவெரெஸ்ட். மெய் சிலிர்த்தது என்பதை தாண்டி உயிர் வரை சிலிர்த்தது. மேகமா? பனியா? என்று பிரித்தெடுக்க முடியாமல் எங்கும் வெள்ளை படுக்கை. இந்த காட்சியை பல முறை படத்தில் கண்டு இருந்தாலும்,நேரில் காணும் காட்சிக்கு, நிழல் நிகரில்லை. வரிசையாக அன்னபூரணா ,கவுரி ஷங்கர் , எவெரெஸ்ட் என்று எல்லா தொடர்களையும் ஜன்னல் வழியே கண்டு களித்தப்பின் காக்பிட் சென்று நேருக்கு நேரும் காணும் பாக்கியமும் கிட்டியது.
அந்த பிரம்மாண்ட படைப்பை கண்டவுடன் எழும் உணர்வுக்கு என்ன பெயர்? ஆனந்தமா? பிரம்மிப்பா? ஆச்சரியமா? தெரியவில்லை. இப்போது யோசித்தால் ஒன்று மட்டும் தெரிகிறது. மேலே கூறிய எதுவுமே இல்லை.அந்த நொடி மனதில் எந்த எண்ணமும் இல்லாமல் அமைதியாய் இருந்தது. எந்த வித சலனமோ உணர்ச்சியோ இல்லை.அதற்காக உயிரற்று கிடந்தேன் என்பதில்லை. அந்த பொழுதை விட lively யாக எப்பொழுதுமே இருந்தது இல்லை.ஆனால் கண்களில் மட்டும் கண்ணீர் வடிந்து கொண்டு இருந்தது. காரணம் இன்று வரை அறியவில்லை நான்.
ஹிமாலயத்தை கண்ணால் காண்பது என்பது என் bucket list item களில் ஒன்று.கண்டப்பின் மீதி ஐட்டம்கள் எல்லாம் அர்த்தமற்றதாய் உணருகிறேன். எனக்கும் , என் வாழ்வுக்கும் , ஹிமாலயத்திற்கும் என்ன சம்பந்தம் இருந்து விட போகிறது? அனால் அந்த அமைதி இன்று வரை என்னுள் தொடர்வதை உணருகிறேன்.அங்கே ஒன்றுமே இல்லை.வெறுமை,சூனியம் தான். ஆனால் அந்த சூன்யம் தன் எல்லாம் என்பது இப்போது புரிய வருகின்றது.
அதன் பின் நாட்களில் நாங்கள் சென்ற chitwan காடுகள் , ஷாப்பிங் எல்லாவற்றிலேயும் இமயத்தின் ஆக்கிரமிப்பு தானே.
வாழ்வில் ஒரு முறையேனும் அனைவரும் அனுபவிக்க வேண்டிய அமைதி, ஆனந்தம்!,பேரானந்தம்!!!
ஒருமுறையேனும் சென்று வாருங்கள். நீங்கள் எவ்வளவு தயாராக சென்றாலும் இமயம் உங்களை ஆச்சர்யமூட்ட தவறாது.உங்கள் பிரம்மிப்பிற்கு எல்லை இருக்காது.

உங்களுக்காக என் நிழல்களில் சில .







Friday, January 3, 2020

அழகு


எங்கோ குப்பையில் பூத்திருக்கும் ஒற்றை ரோஜா
யாருக்கும் தெரியாமல் வகுப்பில் வரும் குட்டி தூக்கம்
விடிந்ததும் நினைவை விட்டு அகலும் கலர் கனவு
கடலில் கொட்டும் மழை
பொங்கும் பால்
யானைக்கு வைக்கப்படும் திருஷ்டி பொட்டு
எல்லாம் அழகே !!