நம் சமூகத்தில் ஆண் என்றும் பெண் என்றும் அநியாயமாய் பிரித்து பார்க்கப்படும் ஆயிரம் நியாயங்களில் ஆயிரத்து ஒன்றாவது நியாயம் சமீபமாய் என் மண்டைக்குள் உட்கார்ந்து கொண்டு அநியாயம் செய்தது .
வாக்கிங் செல்வது , ஜிம் செல்வது போன்றவையே !.பிள்ளையும் , பேரனும் செல்லும் பொழுது பெருமையாக தோன்றும் அதே விஷயம் , (மரு)மகளோ , பேத்தியோ செய்யும் பொழுது அவ்வளவு பெருமை தருவதில்லையே!!! பொம்பள பிள்ளைக்கு வீட்டு வேலையே பெரிய exercise. வேலை செய்யும் பெண்ணை நிறுத்தி விட்டு டெய்லி வீடு பெருக்கி , துணியை போட்டு துடைச்சாலே போதுமே , அதை விடவா பெருசா பண்ண போறான் அந்த ஜிம் இல். நாங்க எல்லாம் அந்த காலத்திலே என்று அலெக்சா வை பாட சொல்லி கேட்டு கொண்டே , அவர்கள் பாட்டுக்கு இசையோடு வசை பாடுபவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள் . அப்படி ஒரு அம்மிணியும் அவரிடம் மாட்டிக்கொண்ட (மரு)மகளும் அன்று என் வழக்கமான பார்க் வாக்கிங் பொழுது என் கண்ணில் சிக்கினார்கள் .
எனக்கு தெரிந்த வரை வாக்கிங் விட , அம்மா வை சமாளிப்பதிலேயே அந்த பெண் நிறைய கலோரிகளை எரித்து இருப்பார். “ஹ்ம்ம் அதையாவது எரிக்க முடிகிறதே” என்ற அவரின் முக பாவனை , எனக்கு மட்டும் தோன்றியதா என்று தெரியவில்லை . என்னுடைய பாதி இலக்கை தாண்டும் வரை புலம்பலை நிறுத்தாத அந்த அம்மா கடைசியாக” ஹ்ம்ம் இங்கே ஒரு பிள்ளையார் இருந்த கூட புண்ணியம் , வெறும்ன இப்படி சுத்தி சுத்தி வரதுக்கு அதுவாவது செய்யலாம் “என்று சலித்து கொண்டார்.
அவர்கள் சென்ற பின்பும் அவருடைய கடைசி புலம்பல் என்னுடனே பார்க்கை சுத்தி வந்தது.எதற்காக இப்படி சுத்துவதை பற்றிய சிந்தனை என்னை சுற்றுகிறது என்று யோசித்து ,யோசித்து எனக்கு தலையே சுற்றியது .சுற்றும் அனைத்தையும் நிறுத்த எண்ணி ஒரு இடத்தில் உட்கார்ந்து எண்ணலானேன் . அப்போழுது எதேச்சையாய் கண்ணில் பட்டது அது!!! துளசி மாடம் போன்ற சற்று உயரமான அமைப்பு. சுற்றும் பார்த்தேன் அவரவர் , அவரவர் போனில் விரலுக்கான excercise செய்து கொண்டு இருந்தனர். எனக்கு தெரிந்த வரை இந்த பார்க்கில் watchman என்று யாரும் கிடையாது . இன்றிரவே செய்து விட வேண்டும் என்று முடிவுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன் .
3 மணி நேரம் கழித்து பார்க்கில் யாரும் இல்லாத அந்த நேரத்தில் என் வீட்டில் இருந்த ஒரு பிள்ளையார் பொம்மையை அந்த துளசி மாடம் போன்றவற்றில் வைத்து கீழ் ஒரு சிறிய அட்டையில் “ஸ்ரீ திட வாக்கு (walk) விநாயகர்“ என்று எழுதி வைத்து விட்டு வந்தேன்.
அடுத்த நாள் என்னுடைய வழக்கமான வாக்கிங் சென்ற பொழுது மக்கள் கூடி கூடி அந்த பிள்ளையாரை பார்ப்பதை பார்த்து , எனக்குள் சிரித்து கொண்டேன் . அவரை பார்த்து சிரித்து கொண்டே நடப்பது இப்போதெல்லாம் எனக்கு பிடித்து போனது .திடீரென்று ஒரு நாள் யாரோ ஒரு புண்ணியவான், அந்த பிள்ளையார்க்கு கீழ் ஒரு சின்ன சுலோகம் எழுதி வைத்து இருந்தான் . இந்த ஐடியா நன்றாக இருக்கிறதே என்று நானும் டெய்லி அந்த சுலோகம் சொல்லி கொண்டே பார்க்கை சாரி பிள்ளையாரை சுற்றினேன் .அடுத்த ஒரே வாரத்தில் அந்த பார்க் முழுவதும் பெண்கள் வாக்கிங் ஆரம்பித்தனர் .”எல்லாம் நம் வாக்கு விநாயகர் மகிமை “.கடைசியாக எனக்கு விநாயகர் அருள் கிட்டியது .எப்படி தெரியுமா , முதலில் பிள்ளையருக்கு பிள்ளைர்யார் சுழி போட்ட அந்த அம்மிணியும் அவர் (மரு)மகளும் சுற்றுவதை நான் கண்ட பொழுது அன்றிரவு எதையோ சாதித்த சந்தோஷத்தில் மிக நிம்மதியாக உறங்கினேன்.
அடுத்த நாள் வாக்கிங் பொழுது என்னையும் அறியாமல் எனக்குள் ஒரு பெருமை .வெளியே சொல்லவும் பயம் , சொல்லாமல் நல்லது செய்வது நம்ம ரத்தத்திலேயே இல்லையே !!!கஷ்டப்பட்டு எனக்குள் நானே சிரித்துக்கொண்டும் கைகுலுக்கி கொண்டும் இருந்த நேரம் ஒருவர் அந்த பார்க்கை பெருக்குவதற்காக வந்தார். புதிதாக இருக்கவே அவர் இடம் சென்று விசாரித்தேன் . மறுநாள் யாரோ VIP வருவதாகவும் அதற்காக சுத்தம் செய்வதாகவும் கூறினார். என் கவலை எனக்கு. ஐயோ அப்போ அந்த பிள்ளையார் என்று என்னையும் அறியாமல் சத்தமாக கேட்டுவிட்டேன் .அந்த பெரியவரும் அதுக்கு என்ன மா , அவர் வாட்டுக்கு இருந்துட்டு போறாரு , அவர் வர போய் இப்போ எவளோ பேரு டெய்லி வராங்க பாருமா என்றார் .பப்ளிக் னு தொந்தரவு சொல்லாதவரைக்கும் ஒன்னும் பிரச்னை இல்ல மா என்று அவர் வேலையை செய்ய சென்று விட்டார் . பிள்ளையாரால யாருக்கும் தொந்தரவு இல்லையே என்று நானும் நகர்ந்தேன் .
அடுத்த 4 நாட்கள் வெளியூர் சென்றமையால் வாக்கிங் செல்ல முடியவில்லை .வந்த உடன் நான் ஓடி சென்று தேடியது என் வாக்கிங் கடவுளை. சென்றவளுக்கு அதிர்ச்சி. கடவுளை காணோம். நாத்திகம் பேசவில்லை , என் திட வாக்கு விநாயகரை காணவில்லை. விசாரித்ததில் முந்தைய தினமே அவரை வேறு லொகேஷன் கு transfer செய்ததாக தகவல். அவர் என்ன செய்தார் , யாருக்கும் தொந்தரவு இல்லமல் அமைதியாக இருந்தாரே அவரை ஏன் மாற்றினார்கள் என்று எனக்கு கோவம். கிடைத்த தகவலின்படி , முதல் நாள் யாரோ பிள்ளையாருக்கு பூஜை செய்யப்போய் அதற்கு கூட்டம் கூடி , பிரச்சனை ஆனது போலும். யார் இங்கே முதலில் பிள்ளையாரை வைத்தது என்று வேறு விசாரித்து கொண்டு இருக்கிறார்களாம் . எடுத்தேன் ஓட்டம் . 5 வருட வாக்கிங் இன்று ரன்னிங் ஆனது .
ஆனாலும் இரவு தூக்கம் இல்லை ஒரே துக்கம். யாரு டா பூஜை எல்லாம் போட சொன்னது என்று கடுப்பு ஒரு பக்கம் என்ன பூஜை என்ற ஆவல் ஒரு பக்கம். பக்கம் பக்கமாய் யோசித்தாலும் விடை பக்கத்திலேயே இல்லை . யோசித்து கொண்டே புரண்டு படுத்தவளுக்கு , WhatsApp சொன்ன செய்தி , “நேற்று சங்கட ஹர சதுர்த்தி” பார்க் பிள்ளையார் சிறப்பு பூஜை படங்கள்.🙈🙈😳😳
இப்போதெல்லாம் என் வாக்கிங் வீட்டில் இருந்து 5 km தள்ளி இருக்கும் வேற ஏரியா பார்க்கில் .😩😩😩
பி. கு இது நிஜம்மல்ல கதை 😊😎