Sunday, March 8, 2020

என்னை நானாக பார்த்த என் தேவதைகளுக்கு

என் தேவதைகளுக்கு இறக்கை இல்லை
இரக்கம் நிறைய !

என் தேவதைகளுக்கு பறக்கத் தெரியாது,
பாசத்தை பொழிய தெரியும் !

என் தேவதைகள் வரம் கொடுக்காது ,
வரமே அவர்கள் தான் !

அவர்கள் சிறகை பிய்த்து எறிந்தாலும் ,
தரையில் காலூன்றி , நீங்கள் பறக்க வானாய் இருப்பார்கள்.

அவர்கள் கடவுளுக்கு நெருக்கமானவர்கள் அல்ல
சமமானவர்கள் !!!


Wednesday, March 4, 2020

Always be fearless to be fearful

நாம் சிறு வயது முதல்லே எதற்கும் பயப்படாதே என்று சொல்லி வளர்க்கப்படுகிறோம். அதை விட , தேவையில்லாத பல விஷயங்களுக்கு பயப்படு என்று சொல்லப்படுகிறோம் . அந்த வயதில் நம்மை சீராக வளர்ப்பதற்கும் , தற்காப்புக்காகவும் சொல்லப்பட்டவை அவை . ஆனால் அவைகளையே நாம் இன்றும் பிடித்து கொண்டு இருந்தால் சரியா ? அந்த பயங்கள் நடை வண்டி போன்றவை . குழந்தை நன்றாக நடக்கும் வரை வண்டி தேவை தான் . ஆனால் நன்றாக வளர்ந்து ஓடியாடிய பின்பும் அந்த வண்டியை பிடித்து கொண்டு இருப்பேன் என்று அடம் பிடித்தால் , சரியாகுமா ? பெரும்பான்மையானவர்களுக்கு உடற் வளர்ச்சி ஒன்றாக இருக்கும் காரணத்தினால் , நம் பெற்றோர்களுக்கு எந்த வயதில் எது தேவை என்று தெரியும் . ஆனால் மன வளர்ச்சியும் , முதிர்ச்சியும் அப்படி அல்லவே . அதனால் நம்மை நெறிப்படுத்த வேண்டிய பல விஷயங்களை நாமே சுய பரிசோதனை செய்து எடுத்து போட வேண்டும் .

சிறு வயதில் என் அம்மா , அப்பா வை சொல்லி பயமுறுத்திய என்னை கீழ்ப்படிய வைத்தார்.அப்பாவின் மேல் உள்ளே பயத்தாலேயே சீக்கிரம் எழுவது , படிப்பது , வீட்டில் சின்ன சின்ன வேலைகள் செய்வது என்று எல்லாம் அம்மா சொல் படி செய்தேன்.அப்பா இரவு வீட்டிற்கு வருவதற்குள் home work முடித்து விட வேண்டும். பின்னர் இரவு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பவை எழுத படாத விதி.அப்பொழுதெல்லாம் எனக்கு அப்பாவின் அருகில் சென்று அமரவோ , அப்பாவிடம் நேராக பேசவோ பயம். எல்லாம் அம்மா மூலமாக தான் . எனக்கும் அப்படி தான் , தம்பிக்கும் அப்படி தான்.

ஆனால் மிக சமீபமாக தான் தெரிந்து கொண்டேன் அம்மா தான் அப்பாவை நாங்கள் படித்து முடிக்கும் வரை வீட்டிற்கு வர வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார் என்று . அப்பாவிற்கு எங்களை திட்டுவதோ , அடிப்பதோ பிடிக்காது என்றும் , அவர் வீட்டில் இருந்தால் அம்மாவால் எங்களை கண்டிக்க முடியாது என்றும் , இந்த ஏற்பாடு . அதே போல் அப்பாவோடு சாப்பிட்டால் அவருக்கு பயந்து அடம் பிடிக்காமல் சாப்பிடுவோம் என்பது அவள் எண்ணம்.ஆக அப்பா பயம் எங்களை ஒரு வகையில் நெறிப்படுத்தி வளர்த்தது.அனால் இன்றைய நிலைமை அது அல்லவே.

தனது 60ஆவது வயதில் மனைவியை பறி கொடுத்து கடந்த 14 ஆண்டுகளாக தனியாக ,
(எங்களுக்காக துணிவாக ) நிற்கும் அவருக்கு இப்பொழுது தேவை , அவரை கண்டால் பயப்படும் மகள் அல்லவே .பல நேரங்களில் தோழியாக , ஆலோசகியாக ஏன் அவருக்கே தாயாகவும் இருந்து இருக்கிறேன். இப்பொழுது எல்லாம் பயம் தூர சென்றதால் , அன்பு கூடியதாய் உணருகிறேன் .

ஆனால் , பயமில்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ? என்னை பொறுத்த வரை ஓரளவுக்கு பயம் வேண்டும் என்றே தோன்றுகிறது . என்ன ஒன்று , அந்த பயம் பொறுப்புள்ளதாகவும் , நம் வாழ்வையும், நம்மை சுற்றி உள்ளவர்களையும் மேம்படுத்துவதாய் இருக்க வேண்டும் .

நம் உடம்பை நாம் இன்று ஒழுங்காக கவனிக்கா விட்டால் , நாளை என்னாகும் என்ற பயம் !
நாம் பொறுப்பற்று செயல் பட்டால் , நாடும் வீடும் என்னாகும் என்ற பயம் !
மொத்தத்தில் என் பொறுப்பற்ற ஏதோ ஒன்று வேறு யாரையாவது கஷ்டப்படுத்தி விட கூடுமோ என்ற பயம் எப்பொழுதுமே வேண்டும் .

உங்களை ஒரு பொறுப்புள்ள மகளாக , சகோதரியாக , தாயாக , நண்பியாக , குடிமகளாக இருக்க வைக்கும் எந்த ஒரு பயமும் நல்லதாய் தான் இருக்க முடியும் . அப்படி ஒரு பயத்திற்கு, பயப்படாமல் பயப்படுங்கள். உங்கள் பயமே உங்களை காக்கும் .

Courage is knowing  what not to fear - Plato 

If you are not scared a lot you are not doing very much - Robin Sharma 


Love
-U

Tuesday, March 3, 2020

இலக்கு

நீ என்னவாக விரும்புகிறாய் என்பதை விட
அதிகமாக வலிக்கும் கேள்வி,
நீ என்னவாக விரும்பினாய் என்பதே!!!