Thursday, October 27, 2022

ஒரு சாம்பாரின் கதை

வத்தக்குழம்பைப் போல் சாம்பாருக்கு Strict protocol இருப்பதாக தெரியவில்லை.
தற்போது உள்ள மெகா சீரியல் களைப்போல. இது தான் கதை என்றில்லாமல் எதை எடுத்தாலும் பல பேருக்கு பிடிக்கின்றதே அப்படியே சாம்பாரும்.
 சிலருக்கு கட்டியாக, சிலருக்கு தண்ணீராக, சிலருக்கு பல காய்காரிகள் போட்டு கதம்பமாக, சிலருக்கு காயே இல்லாமல் சின்ன வெங்காயம் மட்டும் போட்டு இப்படி பல.

சாம்பார் சாப்பிட மட்டுமல்ல Variety, பலப்பல psychology விஷயங்களையும் உள்ளடக்கிய ஒரு வஸ்து.

நீங்கள் விருந்தினராய் போயிருக்கும் வீட்டில் பொடி மட்டும் போட்டு சாம்பார் வைக்காமல் , அரைத்து விட்டுவைக்கப்படும் சாம்பார் அவர்களுக்கு நீங்கள் ஸ்பெஷல் என்பதை உணர்த்தும். அதுவே 2, 3 நாட்களுக்கு பின்னர் பொடி போட்ட சாம்பாராக மாறும் பொழுது , அடுத்த நாள் ரசம் வரப்போகிறது என்றும் நீங்கள் கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அர்த்தம்.
ரசமாக இருந்தால் என்ன ஏதோ ஒசியில் கிடைத்தால் போதும் எனும் ரகத்தை சார்ந்தவர் உங்கள் விருந்தினர் என்றால்,  நீங்கள் வருந்தனர்.

அதுவே உங்கள் வீட்டில் தீடிரென்று விருந்தாளி யாரும் இல்லாமலே உங்களுக்கென்று பிரத்யேகமாக அரைத்துவிட்ட சாம்பார் வந்தால் சமையல் செய்பவர் உங்களிடமிருந்து எதையோ எதிர்பார்க்கிறார்கள் என்று கொள்ளவும். புரிகிற மாதிரி சொல்லச் சொன்னால்,சடாரென்று Laptopல் இருந்து பார்வையை உங்கள் மீது மாற்றி , ஒரு வழிசலான சிரிப்பை உதிர்க்கும் கணவரைப் போல.

சாம்பாருக்கு என்று பிரத்யேகமாக காய்கறிகள் பல உண்டு. அவை அனைத்தையும் விட்டு அவரை, வாழை போன்றவை சாம்பாரில் மிதந்தால் , மார்க்கெட் உடனடியாக செல்வது சாலச்சிறந்தது. சில நேரங்களில் இது, உங்களை வெறுப்பேற்ற கூட நடக்கலாம். அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

மதிய உணவிற்கு பின்னரும் நிறைய சாம்பார் மீதியிருப்பின் இரவு இட்லியோ தோசையோ வரப்போகிறது என்று அர்த்தம்.
இங்கே தான் அனைவருக்கும் நான் ஒன்று சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன். சாப்பாடு சாம்பார் என்பது வேறு, இட்லி சாம்பார் என்பது வேறு. பெயர் ஒன்றாக இருப்பதினால் குழப்பிக் கொள்ள கூடாது. பெயர் ஒன்றாக இருப்பதினால் தங்கர்பச்சன் அமிதாப்பச்சனின் சகோதரர் ஆகிவிடுவதில்லையே!(புரிஞ்சுக்கோங்க please. முடியல...).
இதே Logic சாம்பார் சாதம் மற்றும் Bisibelabathற்கும் பொருந்தும்.

எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக , தினப்படி சமையலில் சாம்பார் என்பது வத்தக்குழம்பு, மோர்க்குழம்பு, துவையல் என்று உருமாருவது சாதாரணம் தான். ஆனால் அதுவே முற்றிலும் கட்டாகி சுடான சாதத்திற்கு முதலேயே ரசம் வந்தால் சமைப்பவருக்கு ஓய்வு தேவை. 2 நாட்கள் உட்கார வைத்து நீங்கள் பரிமாற வேண்டும் என்று கொள்ளவும். முடியாத பட்சத்தில் ஹோட்டலில் order செய்யவும். சமைப்பவருக்கும் ஒய்வு கிடைக்கும், சாப்பிடுவருக்கும் சமைப்பவரின் அருமை புரியும். (அப்படி எல்லாம் புரியாது எனும் மனைவிமார்கள் முதல் advantage ஐ திருப்தி பட்டுக்கொள்ளவும்.)