Friday, September 22, 2023

பார்க்கில் பராக் பார்த்தவை ….(2) எத்தனை கோடி முகங்கள் வைத்தாய் இறைவா

 ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பராக்கு பார்த்த போஸ்ட்.
(உடனே ரொம்ப நாளைக்கு அப்புறமா வாக்கிங் ,அப்படி தானே ?அப்படினு கேட்டு என் மனச கஷ்டப்படுத்த கூடாது.!!!.)

இன்னிக்கி வழக்கமான பார்க்கில் தான் வாக்கிங் படலம். அங்கே ஒரு 60 வயது மதிக்கதக்க பெரியவரும் வாக்கிங்கில் இருந்தார். கொஞ்ச நேரமாகவே கொஞ்சம் டென்ஷன் ஆக யாருக்கோ போன் ட்ரை செய்து கொண்டிருந்தார். லைன் கிடைக்கவில்லை போலும். கவலை கலந்த கோபம் அவர் முகத்தில். சிறிது நேரத்தில் அவர் போன் அடித்தது. பேசியதில் இருந்து அவர் மனைவி என்று உணரலாம். ஒரு 5 நிமிட உரையாடலில் அந்த பெரியவரில் அத்தனை உணர்வுகள் , உணர்ச்சிகள், பலப்பல முகங்கள். 

பெரியவர்: ஏய். நீ பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கும் போது மாப்பிள்ளை போன் பன்றாருனு சொல்லி வெச்சுட்டு போயிட்ட. அவரு ஏன் உனக்கு போன் பன்றாரு? எப்பவும் அது தானே கூப்பிடும். என்ன ஏதாவது பிரச்சனையா என்ன? அது நல்லா இருக்குல? பாப்பா நல்லா இருக்குல?(குரலில் அப்படி ஒரு பயம் கலந்த பதட்டம்)

போனின் மறுபக்கம்: *******

பெரியவர்: என்னது? பொறந்த நாள் கொண்டாட்டமா? அது சரி. ஆடு , மாடு எல்லாம் தான் பொறக்குது. இல்லை தெரியாம தான் கேக்கறேன் உன் பொண்ணுக்கு என்ன வயசு ஆகுது. பொறந்த நாள் கொண்டாடற வயசா இது. அவளுக்கே ஒரு பொண்ணு இருக்கு , உன் மாப்பிள்ளைக்கு மறந்து போச்சாக்கும்.ஊரிலே இல்லாத பொண்டாட்டி. பொம்பள புள்ளய பெத்து வெச்சு இருக்கோமே , 1008 செலவு வரும் , காசு செக்கணும் னு அறிவு உன் பொண்ணுக்கு தான் இல்லைனா , அதுக்குனு வந்து இருக்கு பாரு ஜாடிக்கு ஏத்த மூடி. பொண்டாடி பொறந்த நாள் கொண்டாறாராம் பொறந்த நாள். இல்ல , நான் தெரியாம தான் கேக்கறேன் உன் பொண்ணு நம்ம வீட்டிலே இருந்த வரைக்கும் ஒழுங்கா தானே டி இருந்தா? (குரலில் அவ்வளவு கோவம்)

போனின் மறுபக்கம்: ********

பெரியவர்: போனை அணைத்து விட்டு சட்டை பையில் வைத்துகொண்டு நடையை தொடருகிறார்.

இங்கே தான் அவரின் அடுத்த முகம். போனை பையில் வைத்தவுடன் ஒரு சிறு புன்முறுவல். வானை பார்த்து ஒரு சந்தோஷ சிரிப்பு. நடையில் ஒரு உற்சாகம். மாப்பிள்ளை வருங்காலத்திற்கு சேமிக்கவில்லையோ என்று பதறிய அதே தந்தை , தன் மகளின் பிறந்த நாளை ஒருத்தன் இவ்வளவு உற்சாகமாக கொண்டாடுவதில் அத்தனை ஆனந்தம் கொள்கிறார். தன் வீட்டு இளவரசி இன்னோரு வீட்டி ராணியாய் இருப்பதில் அவ்வளவு பெருமிதம் அத்தந்தைக்கு.

நான் பல இடங்களில் கண்ட ஒன்று. மாமியாருக்கும் மருமகளுக்கும் உள்ள "Ego" சில நேரம் பாச போர்வை போர்த்தி கொண்டுள்ளது. ஆனால் , மாமனாருக்கும் மாப்பிள்ளைக்கும் இடையே உள்ள பாசமோ பல நேரம் "Ego" வேடம் போட்டு கொண்டிருக்கிறது.


-உங்கள்

U