Friday, September 16, 2022

பார்க்கில் பராக் பார்த்தவை ….(1)

 எனக்கு தினம்தொறும் பார்கில் வாக்கிங் செல்லும் பழக்கம் உள்ளது.ஹ்ம்ம் சரி…ஒரு நாள் விட்டு ஒரு நாள்…ஹ்ம்ம்…வாரம் இருமுறை…நம்பமாட்டீங்களே !!! சரி அப்பப்போ போவேன்….போதுமா ? (பய புள்ளைங்க எப்படி தான் கண்டுபிடிக்குதுங்கன்னே தெரியல…) . சரி விஷயத்துக்கு வருவோம்..

ஒரு சில பேருக்கு பாட்டுக்கேட்டுக்கொண்டே வாக் பண்ண பிடிக்கும் , சில பேருக்கு பேசி கொண்டே , எனக்கு பராக் பார்த்துக்கொண்டே ! எவ்வளவு விதவிதமான மனிதர்கள் , குணங்கள்.

 பொதுவாக முதல் சுற்றின் பொழுது அனைவரையும் கவனிப்பேன். அதில் எனக்கு அன்று பிடித்தவர்களை அடுத்த அடுத்த சுற்றுகளின் பொழுது கூர்ந்து கவனிக்க ஆரம்பிப்பேன். அப்படியாக நான் கவனிக்கும் மனிதர்களையும் , நிகழ்வுகளையும் உங்களுடன் பகிர நினைத்ததன் ஆரம்பமே இந்த தொடர் வலைப்பதிவு..

தாம்பத்தியம்

இன்று என்னை கவர்ந்தது ஒன்று அல்ல இரண்டு தம்பதிகள். ஒரு தம்பதி புதியதாக மண முடித்தவர்கள் , மற்றொருவர் தங்களின் ஒய்வு வாழ்வில் இருப்பவர்கள். இரண்டு பேரிடமுமே romance குறைவில்லை , ஆனால் அது வெளிபடும் விதம் வெவ்வேறு.

முதலாய் புதிதாய் மணமானவர்களின் கதை. நல்ல ஓரு மணிரத்னதின் காதல். கொஞ்சல் , கெஞ்சல் எல்லாம் உண்டு. பார்க்கவே தித்திப்பாய் !!!மனைவி பேசிக்கொண்டே இருக்க அதை ரசிக்கும் கணவன். அவ்வப்பொழுது அவனுடைய சீண்டல் பார்வையால் மனைவி படும் வெட்கம் …அம்மம்மா கொள்ளை அழகு.கணவனை ரசித்து கொண்டு இருந்தாலும் அப்பெண் ஏதோ அவசரத்தில் இருப்பதாகவே தோணிற்று.அவளும் கிளம்பலாம் என்று பல முறை கூறியும் கணவனோ கிளம்புவதாய் தெரியவில்லை . சட்டென்று அவள் எழுந்து ,”கிளம்புங்க லேட் ஆனா அம்மா கத்தும் , இனிமேல் வெளியே விடவே விடாது”, என்றாள். கணவனுக்கோ சிரிப்பு தாங்கவில்லை. அந்த நொடி தான் இந்த் “Romantic movie” , “RomCom Movie” ஆக மாறியது. சிரித்து கொண்டே கணவன் கூறியது.”அடியேய் நமக்கு கல்யாணம் ஆகிருச்சி டி. நீ ஏன் கூட தான் வீட்டுக்கு வரனும்.இன்னுமா அம்மா?”. பதிலை கேட்ட எனக்கும் குபீர் .

நானும் அந்த பெண்ணொடு சேர்ந்து வாய் விட்டு சிரித்தேன் , மனதிற்குள். 

 அவர்களை நன்றாக கவனித்து பார்த்தால் புரியும்.புதிதாய் திருமணம் ஆனவர்கள் தான் என்றாலும் அவர்கள் இருவருமே 35 வயதை நெருங்கியவர்களாய் இருக்கிறார்கள். வருஷக் கணக்காக காதலித்து வீட்டு சம்மததிற்காக வருஷக்கணக்காய் காத்திருந்து கரம் பிடித்தவர்களாய் இருக்க கூடும்.கடைசியாய் அவள் நினைத்து நடந்தேறிய பின்னும் நம்ப முடியாமல் இருக்கிறாளோ அப்பெண்.எது எப்படியோ கடைசி வரை இதே காதலோடு வாழ்க என்று மனதிற்குள்ளேயே வாழ்த்தி வந்த வேலையை பார்ப்போம் என்று நகர்ந்த என் கண்ணில் பட்டனர் இரண்டாவது தம்பதி.

முதல் தம்பதியிடம் நான் பார்த்த அதே காதல் . அக்கறை , அரவணைப்பு , புரிதல் என்று பல ரூபத்தில்.இங்கே கணவன் பேசிக்கொண்டே இருக்க , மனைவி ரசிக்கிறார்.ஆனாலும் மனைவியின் எண்ணொட்டத்தில் வேறு ஏதோ ஒன்றும் இருப்பதாய் தோணிற்று.கடைசியாக கணவன் கிளம்பலாம் என்று மனைவியை அழைக்க அவளோ இன்னும் சிறிது நேரம் என்கிறாள். கணவன் , “எனக்கு ஒன்னும் இல்லை மா , நீ தான் போய் அவங்க office லே இருந்து வருவதுகுள்ளே டிபன் செய்யனும் . Late ஆ தூங்கினாலும் காலையிலே உனக்கு தானே கஷ்டம்”. அதற்கு மனைவியின் பதில் ,  “நீங்க போங்க , நான் கொஞ்ச நேரம் இருந்துட்டு வரேன்.”. கணவன் அவளை பார்த்துக்கொண்டே வீடு நோக்கி நடக்கிறார்.

இவர்கள் இருவரையும் கண்ட எனக்கு தோன்றியவை சில.

1. கல்யாணம் ஆன புதிதில் கணவன் “me time” , கேட்கிறான் , மனைவி அவன் அருகாமையை விரும்புகிறாள். வருடங்கள் செல்ல செல்ல , மனைவி ,  “me time” கேட்கிறாள் , கணவனுக்கு அவளது அருகாமையே ஆனந்தம்.

2. முதலில் மனைவி பேசப்பேச கணவன் ரசிக்கிறான் , பின்னே அவன் பேச ஆரம்பிக்கிறான்.

3. முதலில் காதலே எல்லாமுமாய் , பின்னர் மனைவியே எல்லாமுமாய்.

வாழ்வை யோசித்தபடியே பார்க்கை விட்டு வெளியே வந்தேன் . Park இல் பராக் முடிந்து வீட்டிற்குள் Uthra பராக் , பராக் , பராக் !!!