Monday, January 30, 2023

Advice from Arali :)

எங்கள் வீட்டின் எதிரே ஒரு செவ்வரளி செடி உண்டு. தினமும் ஒரு 15 முதல் 20 பூக்கள் வரை பூக்கும். யாரும் அவற்றை பறிப்பதே இல்லை.ஆனாலும் தினமும் விடாமல் பூக்கும். மறுநாள் அப்பூக்கள் உதிரும்.தினம் பார்த்துக்கொண்டிருக்கும் எனக்கு ஒரு நாள் ஒடியது இப்படியாய் ஒரு கிறுக்குத்தனம்!!!

“அச்செடி தான் பூக்களை கண்டுகொள்வதே இல்லையே , பின் ஏன் அவை தினம் தினம் பூக்க நினைக்கின்றன? அந்த செடி தான் ஆகட்டும் , பூக்களுக்கும் ,இலைகளுக்கும் தருவதை போல் , தினமும் ஊட்டம் , கொடுத்தால் தான் என்ன? இன்னும் சொல்ல போனால் இலைகளை விட அதிக ஊட்டம் பூவுக்கே அல்லவா அச்செடி தர வேண்டும். பூக்களுக்காக தானே அச்செடியை வளர்கின்றனர் , இலைகளுக்காக அல்லவே !. அப்படி இருக்க இச்செடியின் செயல் சரியா?” 

இப்படியாய் என் மரமண்டையில் உள்ளே இலைகளை (ஹ்ம்ம் முடியை) பிய்த்து கொண்டேன். சரி தான் , நானும் இப்படி தானே ! எடுக்கும் பல முயற்சி வீண் என்று தெரிந்தும் , ஏன் நானும் இந்த பூக்களை போல் , என்னையே ஏமாற்றி கொண்டிருக்கிறேன். நான் எழுதுவது அனைத்தும் என் வீட்டிலேயே தங்கி இருக்கின்றன , என்னுடனேயே . பின் நான் ஏன் எழுத வேண்டும். என் திருப்திக்காக என்று நானே என்னை இனியும் ஏமாற்றி கொள்வதில் அர்த்தமில்லை. பூக்களுக்கு என்னைப்போல் ஆரறிவு இல்லை , அவை அப்படி தான் , நானும் அப்படியே இருப்பதா? இல்லை , எழுத்துகளை மூட்டைக்கட்டி வைத்து விட்டு உருப்படியாய் ஏதாவது செய்யலாம் என்ற முடிவிற்கு வந்து , ஆறுதலோடு உறங்க சென்றேன்.

இப்படியாய் (வெட்டி)பொழுதை கழித்து கொண்டிருந்த ஒரு நன்னாளில் அந்த செவ்வரளி பூக்களை ஒருவர் பறிக்க கண்டேன். வினவியபொழுது அறிந்து கொண்டது , அன்று வெள்ளிக்கிழமை ஆதலால் , அம்மலர் , மஹாலட்சுமிக்கு மிகவும் விசேஷம் எனவும் , மாலை கோர்க்க உள்ளதாவும் அறிந்தேன்.ஆஹா இன்றாவது மலர்கள் வீணாகாமல் , அன்னை பாதம் அடைகின்றதே என்று ஆனந்தம். சட்டென்று அப்பூக்களின் வாசத்தை தாண்டிய ஹாஸ்யமும் வந்தது. 

நான்: என்ன சிரிப்பு ?

கூடை பூக்கள்: சிரிப்பு இல்லை , அரளிப்பூ !!

நான் : நக்கலா?

கூடை பூக்கள்: இல்லை பூக்கள். 

நான்: …..

கூடை பூக்கள்: என்னமோ உனக்கு ஆரறிவு இருக்கு , நாங்க ஏமாந்துட்டு இருக்கோம்னு சொன்னியே , இப்போ என்ன சொல்ல போற? விடாமல் தினம் தினம் பூத்ததினால் தான் எங்களில் சிலருக்காவது அன்னையை அடையும் பாக்கியம். உன்னனைப்போல் கைவிட்டு இருந்தோம் என்றால் இச்செடியே இல்லாமல் போயிருந்திருக்கும். 
உனக்கான நாளும் வரும். போ , போயி பொழப்ப பாரு !!!!.

பூ பூக்கும் ஓசையை யாரோ கேட்க ஆசைப்பட்டார்களாமே ? இதோ நான் பூ பேசும் ஓசையே கேட்டுவிட்டேன் என்று கத்தி கொண்டே ஒடுகிறேன். ஓடி சென்று அறை கதவில் இடித்து 
விழித்தேன் ! 
ச்சே கனவா?

விடிந்ததும் , என் உள்ளதிலும் ஒளி வந்தது. கனவோ நினைவோ , செய்தி சரி தானே ! புத்தனுக்கு போதி மரத்தில் கிடைத்த ஞானம் , எனக்கு அரளியில் கிடைத்தோ ? அது சரி, போதி மரத்தால், புத்தனுக்கு ஞானம் கிடைக்கவில்லை , புத்தனுக்கு ஞானம் வந்ததால் தானே அது போதி மரம் !!!. 

கற்றுக்கொள்ள நான் தயாராய் இருப்பின் , அரளியும் ஆசானே !!!


அன்புடன்
செவ்வரளியின் சிநேகிதி…